Sai-Satcharitra-Tamil-Chapter-45 - saimagic.com

Sai-Satcharitra-Tamil-Chapter-45

🔯 SaiMagic.com 🔯

 sai satcharitra english book

காகா ஸாஹேபின்‌ ஐயமும்‌, ஆனந்த்ராவ்‌ கண்ட காட்சியும்‌ - மரப்பலகை பாபாவின்‌ படுக்கைக்கானது, பகத்திறுடையது அல்ல!

முன்னுரை

முந்தைய மூன்று அத்தியாயங்களில்‌ பாபாவின்‌ மறைவைக்‌ குறித்து நாம்‌ விவரித்தோம்‌. அவரது நிலையற்ற ஸ்தூல உருவம்‌ நமது காட்சியிலிருந்து மறைந்ததில்‌ ஐயமில்லை. ஆனால்‌ அவரது அழிவற்ற சூட்சும உருவம்‌ எப்போதும்‌ வாழ்கிறது. அவரது வாழ்நாளில்‌ நடைபெற்ற லீலைகள்‌ இன்றும்‌ பெருமளவில்‌ சொல்லப்பட்டு வருகின்றன. அவர்‌ மறைந்த பின்னரும்‌ அவரது புதியதான லீலைகள்‌ நடைபெற்றன. இன்றளவும்‌ தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை பாபா எப்போதும்‌ வாழ்ந்துகொண்டு இருக்கிறார்‌ என்பதையும்‌ அவர்தம்‌ பக்தர்களுக்கு முன்னைப்போலவே உதவிக்‌ கொண்டிருக்கிறார்‌ என்பதையும்‌ தெளிவாக்குகிறது. பாபாவின்‌ வாழ்நாளில்‌ அவரது தொடர்பைப்‌ பெற்றவர்கள்‌ மிக அதிர்ஷ்டசாலிகளே. ஆனால்‌ அவர்களில்‌ எவராவது இவ்வுலகப்‌ பற்றையும்‌, இன்பங்களின்‌ மேல்‌ விருப்பத்தையும்‌ விடாமல்‌ கடவுள்மேல்‌ உள்ளத்தைத்‌ திருப்பவில்லை என்றால்‌ அது அவர்களது துரதிர்ஷ்டமேயாகும்‌. அப்போதும்‌, இப்போதும்‌ தேவை என்னவென்றால்‌ பாபாவின்பால்‌ முழுமனதான பக்தியே. நமது பூலன்கள்‌, உறுப்புகள்‌, மனம்‌ யாவும்‌ பாபாவை வழிபடுவதில்‌ ஒருங்கிணைந்து அவருக்குச்‌ சேவைபுரிய வேண்டும்‌. வழிபாட்டில்‌ சில உறுப்புக்களை மட்டும்‌ ஈடுபடுத்தி, மற்றவற்றை வேறுபக்கம்‌ செலுத்துவது பயனற்றது. வழிபாடு, தியானம்‌ போன்றவை மனப்பூர்வமாகவும்‌, ஆத்மார்த்தமாகவும்‌ செய்யப்படவேண்டும்‌.

கற்புறுமாதர்‌ தம்‌ கணவரிடம்‌ கொண்டிருக்கும்‌ அன்பு, சீடன்‌ குருவிடம்‌ கொண்டிருக்கும்‌ அன்புடன்‌ சிலசமயம்‌ ஒப்பிடப்படுகிறது. எனினும்‌ முன்னது குருபக்தியை விட மிகத்தாழ்வானபடியால்‌ இரண்டையும்‌ ஒப்பிட இயலாது. தந்தையோ, தாயோ, சகோதரனோ அல்லது வேறுஎந்த உறவினரோ நம்‌ வாழ்க்கையின்‌ லட்சியத்தை அடைய (ஆத்ம உணர்வு பெற) உதவிக்கு வரமாட்டார்கள்‌. நாமே திட்டமிட்டுக்கொண்டு ஆன்ம உணர்வு பெறும்‌ பாதையில்‌ வழிநடக்க வேண்டும்‌. உண்மைக்கும்‌, மாயைக்கும்‌ இடையில்‌ பேதம்‌ கண்டு இகபர இன்பங்களையும்‌ பொருட்களையும்‌ துறந்து, புலன்களையும்‌ மனதையும்‌ அடக்கி முக்தியை அடைவதில்‌ மட்டுமே விருப்பமுள்ளவர்களாக இருக்கவேண்டும்‌. மற்றவர்களைச்‌ சார்ந்திருப்பதற்குப்‌ பதிலாக நம்மிடமே நமக்குப்‌ பூரண நம்பிக்கை வேண்டும்‌.

பேதங்கள்‌ உணர பயிற்சி செய்யத்தொடங்கும்போது உலகம்‌ ஒரு மாயை என்றும்‌ நிலையற்றது என்றும்‌ அறிந்து கொள்வதால்‌ உலக ஆசைகள்‌ மீதான பற்று குறைந்து முடிவில்‌ பற்றற்ற நிலையைப்‌ பெறுகிறோம்‌. பிரம்மம்‌ என்பது நமது குருவைத்தவிர வேறல்ல என்றும்‌, அவரே முழு நிச்சயநிலையில்‌ நாம்‌ காணும்‌ அண்டசராசரங்களிலும்‌ வியாபித்து ஆட்கொண்டிருப்பதையும்‌ உணர்ந்து, அவரை எல்லா உயிர்களிடத்திலும்‌ கண்டு வணங்கத்‌ தொடங்குகிறோம்‌. இதுவே கூட்டுப்‌ பிரார்த்தனை (பஜனை) அல்லது வழிபாடாகும்‌.

இவ்விதம்‌ குருவாகிய பிரம்மத்தை மனமுருகி வழிபடும்போது நாம்‌ அவர்களுடன்‌, ஒன்றி ஆன்ம உணர்வைப்‌ பெறுகிறோம்‌. சுருக்கமாக, குருவின்‌ நாமத்தை எப்போதும்‌ ஸ்மரணம்‌ செய்துகொண்டு இருப்பதும்‌, அவரைத்‌ தியானிப்பதும்‌ எல்லா ஜீவராசிகளிலும்‌ அவரைக்‌ காணச்செய்து நம்மீது அழியாத பேரின்பத்தைச்‌ சொரிகிறது. பின்வரும்‌ கதை இதனை விளக்குகிறது.

காகாஸாஹயின்‌ ஐயமும்‌ ஆனந்தராவ்‌ கண்ட காட்சியும்‌

ஏக்நாத்தின்‌ நூல்களான ஸ்ரீமத்‌ பாகவதம்‌, பாவார்த்த ராமாயணம்‌ இரண்டையும்‌ காகா சாஹேப்‌ தீக்ஷித்தை தினந்தோறும்‌ வாசிக்கச்சொல்லி சாயிபாபா உத்தரவிட்டார்‌ என்பது நன்றாகத்‌ தெரிந்த விஷயம்‌. காகா சாஹேப்‌ தீக்ஷித்‌, பாபா உயிருடனிருக்கும்போதும்‌ அவர்‌ மறைந்த பின்பும்‌ இதனைப்‌ பின்பற்றினார்‌. பம்பாய்‌ செளபாத்தியிலுள்ள காகா மஹாஜனியின்‌ வீட்டில்‌ ஒருநாள்‌ காலை காகா சாஹேப்‌ தீக்ஷித்‌ ஏக்நாத்தின்‌ பாகவதத்தை வாசித்துக்கொண்டிருந்தார்‌. ஷாமா என்றழைக்கப்படும்‌ மாதவ்ராவ்‌ தேஷ்பாண்டேயும்‌, காகா மஹாஜனியும்‌ புத்தகத்தின்‌ இரண்டாவது அத்தியாயத்தில்‌ பதினோராம்‌ காண்டம்‌ படிக்கப்பட்டதைக்‌ கவனத்துடன்‌ கேட்டனர்‌. அதில்‌ ரிஷபக்‌ குடும்பத்தைச்‌ சேர்ந்த ஒன்பது சித்தர்கள்‌ அல்லது நாதர்கள்‌ என்றழைக்கப்பட்ட கவி, ஹரி, அந்தரிக்ஷா, பிரபுத்தா, பிப்பலாயன்‌, அவிர்ஹோத்ரர்‌, த்ருமில்‌, சமஸ்‌, கரபாஜன்‌ முதலியோர்‌ பாகவத தர்மத்தை ஜனகராஜனுக்கு உபதேசித்தார்கள்‌.

ஜனகர்‌ அவ்வொன்பது நாதர்களையும்‌ மிகமிக முக்கியமான கேள்விகளைக்‌ கேட்டார்‌. அதற்கு அவர்கள்‌ ஒவ்வொருவரும்‌ திருப்திகரமானமுறையில்‌ பதிலளித்தார்கள்‌.

முதல்வரான கவி பாகவத தர்மம்‌ என்றால்‌ என்ன! என்று விவரித்தார்‌.

ஹரி பக்தனின்‌ குணநலன்களை விளக்கினார்‌.

மாயை என்றால்‌ என்ன என்பதை அந்தரிக்ஷா விளக்கினார்‌.

மாயையை எவ்வாறு கடப்பதென்பதை பிரபுத்தா விளக்கினார்‌.

பரப்பிரம்மம்‌ என்பதை பிப்பலாயன்‌ விவரித்தார்‌.

கர்மத்தைப்‌ பற்றி அவிர்ஹோத்ரர்‌ விளக்கினார்‌.

த்ருமில்‌ கடவுள்‌ அவதாரங்களையும்‌ அவர்‌ செயல்களையும்‌ விளக்கினார்‌.

மரணத்துக்குப்பின்‌ பக்தனில்லாதவன்‌ எங்ஙனம்‌ கூலி கொடுக்கப்படுகிறான்‌ என்பதை சமஸ்‌ கூறினார்‌.

வெவ்வேறு யுகங்களில்‌ வெவ்வேறு விதமான கடவுள்‌ வழிபாட்டைப்‌ பற்றி கரபாஜன்‌ விளக்கினார்‌.

கலியுகத்தில்‌ ஹரி அல்லது குருவின்‌ பாதங்களை நினைஷட்டிக்கொள்வதே விடுதலைக்கு ஒரேவழி என்பதே எல்லா விளக்கங்களின்‌ கருத்துமாகும்‌.

வியாக்கியானம்‌ முடிவடைந்த பின்னர்‌, மாதவ்ராவிடமும்‌ மற்றவர்களிடமும்‌ காகா சாஹேப்‌ மனஞ்சோர்ந்த குரலில்‌ கூறினார்‌. “பக்தியைப்‌ பற்றி ஒன்பது நாதர்களின்‌ விளக்கமும்‌ எவ்வளவு ஆச்சரியமானதாக இருக்கிறது! அதே நேரத்தில்‌ அதை அப்பியாசத்திற்குக்‌ கொண்டுவருவது எவ்வளவு கடினம்‌! நாதர்கள்‌ பூரணத்துவம்‌ பெற்றவர்கள்‌. ஆனால்‌ அவர்களால்‌ விவரிக்கப்பட்ட பக்தியை நம்போன்ற அறிவற்றவர்கள்‌ அடைவது சாத்தியமா? பல பிறவிகளுக்குப்‌ பின்னரும்‌ நாம்‌ அதை அடையப்போவதில்லை. பின்னர்‌ எங்ஙனம்‌ நாம்‌ முக்தியடைய முடியும்‌? நமக்கெல்லாம்‌ கதிமோட்சத்திற்கான நம்பிக்கையே இல்லையென்றே தோன்றுகிறது”. காகா சாஹேபின்‌ இந்த சோர்வான எண்ணத்தை மாதவராவ்‌ விரும்பவில்லை.

அவர்‌ கூறினார்‌, “வைரத்தைப்‌ போன்ற பாபாவைக்‌ குருவாக அடைந்த நல்லதிர்ஷ்டம்‌ உள்ள ஒருவர்‌ இவ்வளவு தாழ்வுணர்ச்சியுடன்‌ அழுவது பரிதாபமானது. பாபாவிடம்‌ அவருக்கு அசைவற்ற நம்பிக்கை இருக்குமானால்‌ ஏன்‌ அவர்‌ மனச்சலனமடைய வேண்டும்‌. நாதர்களின்‌ பக்தி உறுதியானதாகவும்‌, சக்தி வாய்ந்ததாகவும்‌ இருக்கலாம்‌. ஆனால்‌ நமது பக்தி அன்பும்‌, பாசமும்‌ உடையதல்லவா? ஹரியினுடைய அல்லது குருவினுடைய பெயரை ஸ்மரணம்‌ செய்துகொண்டிருப்பதே நமக்கு முக்தியை அளிக்கும்‌ என்று பாபா நமக்கு ஆணித்தரமாகக்‌ கூறவில்லையா?! பின்‌ பயத்துக்கும்‌, கவலைக்கும்‌ ஏது காரணம்‌?” மாதவ்ராவின்‌ விளக்கத்தால்‌ காகா சாஹேப்‌ தீக்ஷித்‌ திருப்தியடையவில்லை. அன்று முழுவதும்‌ அவர்‌ நாதர்களின்‌ சிறந்த பக்தியுணர்வைப்போல்‌ தாமும்‌ எவ்விதம்‌ பெறுவது என்ற சிந்தனையிலும்‌ எண்ணத்திலும்‌, கவலையாகவும்‌, மனஅமைதியற்றும்‌ இருந்தார்‌. அடுத்த நாள்‌ காலை பின்வரும்‌ அற்புதம்‌ நிகழ்ந்தது.

ஆனந்தராவ்‌ பாகாடே என்ற ஒரு பெருந்தகை மாதவ்ராவைத்‌ தேடி அங்கு வந்தார்‌. பாகவத பாராயணம்‌ அப்போது நடந்துகொண்டிருந்தது. பாகாடே, மாதவ்ராவின்‌ அருகில்‌ அமர்ந்து எதையோ அவரிடம்‌ முணுமுணுத்தார்‌. அவர்‌ தாம்‌ கண்ட தெய்வீகக்‌ காட்சியை மெல்லிய குரலில்‌ கூறிக்கொண்டிருந்தார்‌. பாராயணத்துக்கு அவரது முணுமுணுப்பு சிறிது இடையூறாக இருந்ததால்‌ காகா சாஹேப்‌ படிப்பதை நிறுத்திவிட்டு மாதவ்ராவை விஷயம்‌ என்னவென்று கேட்டார்‌. மாதவ்ராவ்‌, “நேற்று உங்கள்‌ சந்தேகத்தை எழுப்பினீர்கள்‌. இப்போது அதற்கு விளக்கம்‌ கிடைத்திருக்கிறது. பக்தியின்‌ ‘காப்பாற்றும்‌’ குணாதிசயத்தையும்‌, குருவின்‌ பாதங்களை வணங்குதல்‌, வழிபடுதல்‌ ஆகிய ஆர்வம்‌ மட்டுமே போதும்‌ என்று பாபா கனவின்‌ மூலம்‌ பாகாடே அவர்களுக்குக்‌ காண்பித்ததைக்‌ கேளுங்கள்‌!” எனக்கூறினார்‌.

எல்லோரும்‌, குறிப்பாக காகா சாஹேப்‌ தீக்ஷித்‌, அக்கனவுக்‌ காட்சியைக்‌ கேட்க ஆர்வம்‌ கொண்டவர்களாக இருந்தனர்‌. அவர்களது யோசனையின்பேரில்‌ பாகாடே தமது காட்சியைப்‌ பின்வருமாறு வர்ணிக்கத்‌ தொடங்கினார்‌.

ஆழமான கடலில்‌ இடுப்பளவு நீரில்‌ நான்‌ நின்றுகொண்டிருந்தேன்‌. திடீரென்று அங்கு சாயிபாபாவைக்‌ கண்டேன்‌. அவர்தம்‌ பாதங்கள்‌ நீரில்பட வைரங்கள்‌ பதிக்கப்பட்ட அழகிய சிம்மாசனத்தில்‌ அமர்ந்துகொண்டிருந்தார்‌. பாபாவின்‌ ரூபத்தால்‌ நான்‌ மிகமிக மகிழ்வுகொண்டு திருப்தியடைந்தேன்‌. கனவு என்று நினைக்கமுடியாத அளவுக்கு தத்ரூபமாக அக்காட்சி இருந்தது. மிகுதியான ஆர்வத்துடன்‌ மாதவ்ராவும்‌ அங்கு நின்றுகொண்டிருந்தார்‌. அவர்‌ உணர்ச்சிவசப்பட்டு, “ஆனந்தராவ்‌, பாபாவின்‌ பாதத்தில்‌ விழு!” என்றார்‌. “நானும்‌ அங்ஙனமே செய்ய விரும்புகிறேன்‌ ஆனால்‌ அவரது பாதங்கள்‌ தண்ணீரில்‌ இருக்கின்றன. எங்ஙனம்‌ எனது சிரசை அவற்றின்மேல்‌ வைக்க முடியும்‌? நான்‌ இயலாதவனாக இருக்கிறேன்‌: என்று நான்‌ கூறினேன்‌. இதைக்கேட்டு பாபாவிடம்‌ அவர்‌ கூறினார்‌, “ஓ! தேவா, நீரில்‌ இருக்கும்‌ தங்கள்‌ பாதங்களை வெளியே எடுத்துக்கொள்ளுங்கள்‌”. உடனே பாபா தமது பாதங்களை எடுத்துக்கொண்டார்‌. தாமதமின்றி நான்‌ அவைகளைப்‌ பற்றிக்க காண்டு வணங்கினேன்‌. இதைக்‌ கண்டு பாபா ஏன்னை ஆசீர்வதித்து, “இப்போது போ, உனது நன்மையை நீ பெறுவாய்‌. பயத்துக்கோ, கவலைக்கோ காரணமில்லை. எனது ஷாமாவுக்கு பட்டுக்கரை வேஷ்டி ஒன்றைக்கொடு. நீ நன்மை அடைவாய்‌” என்றார்‌.

பாபா கனவிலிட்ட ஆணைக்கேற்ப பாகாடே ஒரு வேஷ்டி கொணர்ந்து அதை மாதவ்ராவிடம்‌ கொடுக்கும்படி காகா சாஹேப்‌ தீக்ஷித்தை வேண்டிக்கொண்டார்‌. ஆனால்‌ பாபா அதனை ஏற்றுக்‌ கொள்வதற்கேற்ற ஏதாவதொரு குறிப்பு அல்லது யோசனை கூறினாலன்றி தாம்‌ அதை ஏற்றுக்கொள்ளப்‌ போவதில்லை என்று மாதவராவ்‌ கூறிவிட்டார்‌.

சிறிது விவாதத்திற்குப்பின்‌ காகா சாஹேப்‌ திருவுளச்‌ சீட்டுப்‌ போடத்‌ தீர்மானித்தார்‌. ஐயப்பாடுள்ள எல்லா விஷயங்களிலும்‌ திருவுளச்‌ சீட்டுப்போட்டு பொறுக்கியெடுக்கப்பட்ட சீட்டில்‌ கண்டுள்ளபடி நடப்பது காகா சாஹேபின்‌ நிரந்தரமான வழக்கமாகும்‌. இந்தக்‌ குறிப்பிட்ட விஷயத்தில்‌ ‘ஏற்றுக்கொள்ள’, ‘தள்ளிவிட’ என்று இரு சீட்டுகளில்‌ எழுதப்பட்டு பாபாவின்‌ படத்தின்‌ அடியில்‌ வைக்கப்பட்டு ஒரு குழந்தையால்‌ ஒரு சீட்டு எடுக்கும்படிக்‌ கேட்கப்பட்டது. ‘ஏற்றுக்கொள்ள’ என்ற சீட்டே குழந்தையால்‌ எடுக்கப்பட்டு வேஷ்டியும்‌ மாதவ்ராவிடம்‌ கொடுக்கப்பட்டு, அவரால்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்விஷயமாக ஆனந்த்ராவ்‌, மாதவ்ராவ்‌ இருவருமே திருப்தியடைந்தனர்‌. காகா சாஹேபின்‌ பிரச்சினை தீர்ந்தது.

மற்ற ஞானிகளின்‌ மொழிகளுக்கு மரியாதை கொடுக்க இக்கதை நம்மை ஊக்குவிக்கிறது. அதே சமயம்‌ நமது அன்னையிடம்‌ (அதாவது குருவிடம்‌) முழு நம்பிக்கைகொண்டு அவரது அறிவுரைகளின்படி நடக்கவும்‌ கூறுகிறது. ஏனெனில்‌ அவர்‌ வேறு எவரையும்விட சிறப்பாக நமது நலத்தை அறிகிறார்‌. பின்வரும்‌ பாபாவின்‌ மொழிகளை உங்கள்‌ உள்ளத்தில்‌ ஆழப்பதித்துக்‌ கொள்ளுங்கள்‌. “இவ்வுலகில்‌ எண்ணற்ற ஞானிகள்‌ இருக்கிறார்கள்‌. ஆனால்‌ ‘நமது தந்தையே’ (குருவே), ‘உண்மையான தந்தை’ (நிஜமான குரு) ஆவார்‌. மற்றவர்கள்‌ பல நல்ல விஷயங்களைக்‌ கூறலாம்‌. ஆனால்‌ நமது குருவின்‌ மொழியை மறக்கவே கூடாது. சுருக்கமாக உங்கள்‌ குருவை முழு மனதுடன்‌ நேசியுங்கள்‌. அவரிடமே பரிழூர்ண சரணாகதியடையுங்கள்‌. பயபக்தியுடன்‌ அவர்முன்‌ சாஷ்டாங்கமாக வணங்குங்கள்‌. பின்னர்‌ ஆதவனுக்குமுன்‌ இருள்‌ இல்லாதிருப்பதைப்போல்‌ உங்கள்முன்‌ நீங்கள்‌ கடக்கவேண்டிய உலக வாழ்‌வனும்‌ கடல்‌ இல்லாததைக்‌ காண்பீர்கள்‌.

மரப்பலகை - பாபாவின்‌ படுக்கைக்கானது, பகத்தினுடையது அல்ல!

தமது ஆரம்ப நாட்களில்‌ நாலு முழ நீளமும்‌ ஒரு முழ அகலமும்‌ உள்ள ஒரு மரப்பலகையின்‌ நான்கு மூலைகளிலும்‌ சிட்டி (அகல்‌) விளக்குகள்‌ எரிந்துகொண்டிருக்க பாபா உறங்கினார்‌. பின்னர்‌ அவர்‌ அப்பலகையைத்‌ துண்டுதுண்டாக உடைத்துத்‌ தூக்கி எறிந்துவிட்டார்‌ (அத்தியாயம்‌ 10ல்‌ பார்க்க). ஒருமுறை இப்பலகையின்‌ பெருமையையும்‌, முக்கியத்துவத்தையும்‌ காகா சாஹேப்‌ தீக்ஷித்திடம்‌ பாபா விவரித்தார்‌. இதைக்‌ கேட்டுக்கொண்டிருந்த அவர்‌ பாபாவிடம்‌ “நீங்கள்‌ இன்னும்‌ மரப்பலகையை விரும்பினால்‌ செளகரியமாகத்‌ தூங்குவதற்காக மசூதியில்‌ மீண்டும்‌ ஒன்றைத்‌ தொங்கவிடுகிறேன்‌”? என்றார்‌.

பாபா : மஹல்ஸாபதியை கீழே விட்டுவிட்டு நான்‌ மேலே துயில விரும்பவில்லை.

காகா : மஹல்ஸாபதிக்காக நான்‌ மற்றொரு பலகையும்‌ ஏற்பாடு செய்கிறேன்‌.

பாபா : அவன்‌ எங்ஙனம்‌ பலகையில்‌ தூங்கமுடியும்‌? பலகையின்‌ மீது தூங்குவது எளிதல்ல. தன்னிடத்து பல நல்ல குணங்கள்‌ - பண்புகள்‌ உள்ள ஒருவனே அங்ஙனம்‌ செய்ய இயலும்‌. தனது கண்கள்‌ 'அகல விழித்திருக்கும்‌ நிலையில்‌' தூங்கக்‌ கூடியவனே அதில்‌ தூங்க முடியும்‌. நான்‌ தூங்கப்புகும்முன்‌ மஹல்ஸாபதியை என்‌ அருகில்‌ அமரச்‌ சொல்லி எனது நெஞ்சின்‌ மீது கைவைத்து நாமஸ்மரணம்‌ கேட்கிறதா எனக்‌ கவனிக்கும்படியும்‌, தூங்கிவிட்டால்‌ எழுப்பும்படியும்‌ அவனை கேட்கிறேன்‌. இதைக்கூட அவனால்‌ செய்ய இயலுவதில்லை. தூக்க மயக்கத்தில்‌ தலையை ஆட்ட ஆரம்பிக்கிறான்‌. எனது நெஞ்சில்‌ அவனது கை ஒரு கல்லைப்‌ போல்‌ கனப்பதை உணர்ந்து நான்‌, “ஓ! பகத்‌” என்று கூவும்போது அவன்‌ அசைந்து கண்‌ விழிக்கிறான்‌. தரையின்‌ மீதே சரியாக அமர முடியாமலும்‌, தூங்கமுடியாமல்‌ தடுமாறுபவனும்‌ தனது ஆசனம்‌ (தோற்ற அமைவு) நிலையுறுதியாக இல்லாதவனும்‌, தூக்கத்திற்கு அடிமையானவனுமான அவன்‌ உயரத்திலுள்ள பலகையில்‌ எவ்விதம்‌ தூங்க இயலும்‌?!

மற்ற அனேகமுறைகளில்‌ அடியார்கள்மேல்‌ கொண்ட அன்பினால்‌, “எது நம்முடையதோ (நன்மையோ, தீமையோ) அது நம்மிடம்‌ இருக்கிறது. எது மற்றவனுடையதோ அது அவனிடம்‌ இருக்கிறது” என்று பாபா கூறினார்‌.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌

Shirdi Shri Sai Satcharitra Tamil book

PHP Social Sharing Buttons