Sai-Satcharitra-Tamil-Chapter-2 - saimagic.com

Sai-Satcharitra-Tamil-Chapter-2

🔯 SaiMagic.com 🔯

 sai satcharitra english book

இப்பணியைச்‌ செய்வதன்‌ நோக்கம்‌ - இஃதை மேற்கொள்வதில்‌ உள்ள திறமையின்மையும்‌, துணிவின்மையும்‌ - காரசார விவாதம்‌ - குறிப்பிடக்கூடியதும்‌ முனிவருடைய பட்டமுமான ஹேமத்பந்தை வழங்குதல்‌ - குருவின்‌ அவசியம்‌.

தம்முடைய மராத்தி மூல நூலின்‌ கடைசி அத்தியாயத்தில்‌ இப்பணியைச்‌ செய்வதற்கு அடிகோலிய காரணங்கள்‌, இதைப்‌ படிப்பதற்குத்‌ தகுதியுடையவர்கள்‌ முதலிய வேறுபல அம்சங்களையும்‌ எடுத்துச்‌  சொன்னார்‌. இந்த அத்தியாயத்திலும்‌ அதையே குறிப்பிடத்‌ தொடங்குகிறார்‌.

இதை எழுதுவதன்‌ காரணம்‌

முதலாம்‌ அத்தியாயத்தில்‌ கோதுமை மாவரைத்து, அதை கிராம எல்லைகளில்‌ தூவிவிட்டதன்‌ மூலம்‌ காலரா தொத்து வியாதியைத்‌ தடுத்து அழித்ததான சாயிபாபாவின்‌ அற்புதத்தைக்‌ கண்டோம்‌. நான்‌ சாயிபாபாவின்‌ மற்றும்‌ பல அற்புத லீலைகளைப்‌ பெரும்‌ உள்ளக்கிளர்ச்சியுடன்‌ கேட்டிருக்கிறேன்‌. அக்கிளர்ச்சியே இவ்வழகான பணியாகப்‌ பொங்கி உருவெடுத்தது, சாயிபாபாவின்‌ பெருமையுடைய அற்புதங்களை வரைதலானது, அவருடைய அடியவர்களுக்கு உற்சாகமூட்டுவதாகவும்‌, அறிவுறுத்துவதாகவும்‌ இருப்பதுடன்‌, அவர்களின் ‌பாவங்களையும்‌ நீக்குமாதலினால்தான்‌ நான்‌ சாயிபாபாவின்‌ புனித வரலாற்றையும்‌, அவருடைய போதனைகளையும்‌ வரையத்‌ தொடங்கினேன்‌. ஞானியின் ‌வரலாறு என்பது தர்க்க சாஸ்திரத்துக்கோ, பட்டிமன்றத்துக்கோ உரியது அன்று. அஃது உண்மையும்‌, பெரியதுமான வழியையே காண்பிக்கிறது.

பணியைச்‌ செய்யாத்‌ திறமையின்மையும்‌, தூணிவின்மையும்

தாம்‌ இப்பணியைச்‌ செய்யத்‌ தகுதியுடையவர்‌ அல்ல என்று ஹேமத்பந்த்‌ நினைத்தார்‌. “எனக்கு நெருங்கிய நண்பனின்‌ வாழ்க்கையே தெரியாது. அப்படியே எனது மனதையும்‌ நான்‌ அறியேன்‌. இவ்வாறிருக்கையில்‌ வேதங்களால்‌ கூறவியலாத ஒரு ஞானியின்‌ வரலாற்றையோ அல்லது அவதாரத்தின்‌ குணங்களையோ நான்‌ எங்ஙனம்‌ எழுதுவேன்‌? ஒரு ஞானியின்‌ வாழ்க்கையை விவரிக்கும்‌ ஒருவனும்‌ ஞானியாகவே இருக்கவேண்டும்‌. எனவே நான்‌ எங்ஙனம்‌ அவர்தம்‌ புகழை விவரிக்க இயலும்‌? ஞானியின்‌ வாழ்க்கையை வரைவதென்பது மிகக்‌ கடினமானதாகும்‌. ஒருவன்‌ ஏழ்கடல்‌ ஆழத்தையும்‌ அளவிட்டு விடலாம்‌. துணிஜோடனைகளால்‌ ஆகாயத்தையும்‌ அலங்கரித்து விடலாம்‌. இது தீரமிக்க செயலாகும்‌ என்று நான்‌ அறிவேன்‌. இது என்னைப்‌ பார்த்துப்‌ பிறர்‌ நகைக்க இடங்கொடுத்துவிடும்‌” என நான்‌ சாயிபாபாவின்‌ அருளை நாடினேன்‌.

அடியவர்கள்‌ விரும்பும்‌, வெற்றிகரமாய்‌ முடிவுறும்‌ இப்பணியை மேற்கொள்வதற்கு, ஞானியர்தம்‌ வாழ்க்கை வரலாற்றை எழுதுவோரை கடவுள்‌ விரும்புகிறார்‌ என்று மஹாராஷ்ட்ரத்தைச்‌ சேர்ந்த முன்னோடி கவியும்‌, ஞானியுமான ஸ்ரீ ஞானேஷ்வர்‌ மஹராஜ்‌ என்பவர்‌ எடுத்தியம்பியிருக்கிறார்‌. இப்பணியை ஞானிகள்‌ சங்கல்பிக்கிறார்கள்‌. அடியவன்‌, அம்முடிவை அடையமறைமுகக்‌ காரணமாகின்றான்‌ அல்லது கருவியாகின்றான்‌. உதாரணமாக சக வருடம்‌ 1700ல்‌ கவிமஹிபதி, ஞானிகளின்‌ வாழ்க்கையை எழுதும்‌ உயர்நோக்கம்‌ கொண்டார்‌. ஞானிகள்‌ அவரைச்‌ சங்கல்பித்து பணியை நிறைவேற்றி வைத்தார்கள்‌. அம்மாதிரியே சக வருடம்‌ 1800ல்‌ தாஸ்கணுவின்‌ சேவையும்‌ அங்கீகரிக்கப்பட்டது. முன்னவர்‌ பக்த விஜயம்‌, ஸந்த விஜயம்‌, பக்த லீலாம்ருத்‌, ஸந்த லீலாம்ருத்‌ என்னும்‌ நான்கு நூல்களையும்‌ பின்னவர்‌ நவீன ஞானியரைப்‌ பற்றி விவரிக்கப்பட்ட பக்தலீலாம்ருத்‌, ஸந்த கதாம்ருத்‌ என்ற நூல்களையும்‌ இயற்றினர்‌.

பக்த லீலாம்ருத்தின்‌ 31, 32, 33 அத்தியாயங்களிலும்‌, ஸந்த கதாம்ருத்தின்‌ 57ம்‌ அத்தியாயத்திலும்‌ சாயிபாபாவின்‌ சுவையான வாழ்க்கையும்‌ அவரின்‌ அறிவுரைகளும்‌ நன்றாகச்‌ சித்தரிக்கப்‌பட்டிருக்கின்றன. இவை சாயிலீலா சஞ்சிகையில்‌ (தொகுப்பு 11, 12 & 17) தனியாக பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. படிப்பவர்கள்‌ இவ்வத்தியாயங்களைப்‌ படிக்கக்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. அங்ஙனமே பாந்த்ராவைச்‌ சேர்ந்த திருமதி சாவித்ரிபாய்‌ ரகுநாத்‌ டெண்டுல்கர்‌ பதிப்பித்துள்ள சாயிநாத்‌ பஜன்மாலா என்ற சிறிய அடக்கமான புத்தகத்திலும்‌ சாயிபாபாவின்‌ அற்புதலீலைகள்‌ சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. தாஸ்கணு மஹராஜும்‌ பல்வேறு இனிய பாடல்களை சாயிபாபா மீது எழுதியிருக்கிறார்‌. குஜராத்தில்‌ அமிதாஸ்பவானி மேதா என்னும்‌ ஷீர்டியைச்‌ சேர்ந்த ஓர்‌ அடியவர்‌ சாயிபாபாவின்‌சில நிகழ்ச்சிகளைப்‌ பதிப்பித்துள்ளார்‌. தக்ஷிணபிக்ஷா சன்ஸ்தானும்‌ ‘சாயிநாத்‌ ப்ரபா’வை சில பதிப்புக்கள்‌ செய்தனர்‌. இவ்வாறு சாயிபாபாவை பற்றிப்‌ பல நூல்கள்‌ இருக்கும்போது இந்த சத்சரிதம்‌ ஏன்‌ எழுதப்படவேண்டும்‌, அதற்கான தேவையென்ன என்றும்‌ எதிர்ப்புக்‌ கேள்விகள்‌ வருகின்றன.

விடை தெளிவானதும்‌, எளியதும்‌ ஆகும்‌. அகன்று ஆழ்ந்த எல்லையற்ற ஓர்‌ பெருங்கடல்‌ போன்று சாயிபாபாவின்‌ வரலாறு உள்ளது. அனைவரும்‌ அதனுள்‌ ஆழ்ந்து மூழ்கி விலைமதிப்பற்ற ஞானம்‌, பக்தி என்ற முத்துக்களை எடுக்கலாம்‌. நல்லுணர்வில்‌ ஊறிக்கிடக்கும்‌ மக்களுக்கு அவற்றைக்‌ கொடுக்கலாம்‌. சாயிபாபாவின்‌ கதைகள்‌, சிறுகதைகள்‌, அறிவுரைகள்‌ ஆகியவை மிகவும்‌ அற்புதமானவை. இவ்வுலக வாழ்க்கையினுடைய துன்பப்‌பெருஞ்சுமைகளைச்‌ சுமந்து கொண்டிருப்பவர்கள்‌, கவலையால்‌ பீடிக்கப்பட்டோர்கள்‌ ஆகியவர்களுக்கு மனஅமைதியையும்‌, மகிழ்ச்சியையும்‌ அவை அளிக்கின்றன. வேத அறிவையொத்த விறுவிறுப்புள்ளதும்‌, அறிவூட்டுவதுமான சாயிபாபாவின்‌ இப்போதனைகளெல்லாம்‌ கேட்கப்பட்டு நற்சிந்தனை செய்யப்பட்டால்‌ அடியவர்கள்‌ கோரும்‌ ‘பிரம்மத்துடன்‌ ஐக்கியமாதல்‌’, ‘அஷ்டாங்க யோகம்‌’, ‘தியானப்‌ பேரின்பம்‌’ முதலியவற்றைப்‌ பெறுவர்‌. எனவே இந்நிகழ்ச்சிகளைப்‌ பொறுக்கி எடுக்க எண்ணம்‌ கொண்டேன்‌. அதுவே எனது சிறந்த வழிபாடு ஆகும்‌ என்பதாதலின்‌, சாயிபாபாவின்‌ தரிசனத்துக்கு கொடுத்து வைக்காத இவ்வெளிய ஆத்மாக்களின்‌ கண்களுக்கு இந்நிகழ்ச்சித்‌ தொகுப்புகள்‌ பேருவுவகையாக இருக்கும்‌. எனவே நான்‌ சாயிபாபாவின்‌ போதனைகளையும்‌, இயற்கையானதும்‌ எல்லையற்றதுமான தன்னுணர்வுக்‌ கருத்துக்களையும்‌ சேகரிக்க முற்பட்டேன்‌. இப்பணியில்‌ பாபாவே என்‌ உள்ளுணர்வைக்‌ கிளப்பிவிட்டார்‌. உண்மையில்‌ என்னுடைய அஹங்காரத்தை அவர்தம்‌ பாதத்தடியில்‌ சமர்ப்பித்து இம்மை, மறுமை இரண்டிலும்‌ என்னைப்‌ பூரண சந்தோஷமாக்குவார்‌ என்று எண்ணினேன்‌.

இப்பணிக்கு நானே, எனக்கு அனுமதி அளிக்கும்படி சாயிபாபாவைக்‌ கேட்கமுடியவில்லை. பாபாவின்‌ நெருங்கிய அடியவரான மாதவராவ்‌ தேஷ்பாண்டே என்ற ஷாமாவிடம்‌, பாபாவிடம்‌ எனக்காகக்‌ கேட்கும்படி வேண்டிக்கொண்டேன்‌. அவர்‌ எனது எண்ணத்திற்காக பாபாவிடம்‌ வாதாடினார்‌. “இந்த அண்ணா சாஹேப்‌தங்கள்‌ வரலாற்றை எழுத விரும்புகிறார்‌. நான்‌ ஓர்‌ ஏழைப்‌பக்கிரி என்று கூறாதீர்கள்‌. ஆயின்‌ நீங்கள்‌ சம்மதித்து அவருக்கு உதவியளிப்பதாகக்‌ கூறினால்‌ அவர்‌ எழுதுவார்‌, அன்றித்‌ தங்கள்‌ திருவடிக்‌ கருணையே இப்பணியை நிறைவேற்றிவிடும்‌. தங்கள்‌ அருள்‌ துணையின்றி எதுவும்‌ வெற்றிகரமாகச்‌ செய்ய இயலாது.” சாயிபாபா இவ்வேண்டுகோளைத்‌ திருச்செவிமடுத்தவுடன்‌ உருகி, உதி என்னும்‌ திருநீறளித்து ஆசீர்வதித்துத்‌ தன்னுடையவரம்‌ நல்கும்‌ கரத்தை என்‌ தலைமேல்‌ வைத்து, “இவர்‌ நிகழ்ச்சிகள்‌, அனுபவங்கள்‌ ஆகியவற்றைத்‌ தொகுத்து குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளட்டும்‌. நான்‌ இவருக்குஉதவி செய்வேன்‌. அவர்‌ ஒரு புறக்கருவியே ஆவார்‌. என்னுடைய வரலாற்றை நானே எழுதி, என்னுடைய அடியவர்களின்‌ ஆவலைப்‌ மூர்த்தி செய்யவேண்டும்‌. அவர்தம்‌ அஹங்காரத்தை அறவே களைந்து என்‌பாதங்களில்‌ சமர்ப்பித்துவிடட்டும்‌. வாழ்க்கையில்‌ இங்ஙனம்‌ செய்பவனுக்கே நான்‌ மிகவும்‌ உதவி புரிகிறேன்‌. என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைப்‌ பற்றி என்ன? நான்‌ அவருடைய வீட்டில்‌ ‘ஒல்லூம்‌ வகையெல்லாம்‌ ஒவாதே’ பணிபுரிகிறேன்‌. அவருடைய அஹங்காரம்‌ சிறுதுளியும்‌ எஞ்சியிராமல்‌ அறவே அழிக்கப்பட்டுவிட்டால்‌, நானே அவருட்‌ புகுந்து என்‌ வாழ்க்கை நிகழ்ச்சிகளை எழுதுவேன்‌. அடியவர்‌ தம்‌ உள்ளங்களில்‌ எனது நிகழ்ச்சிகள்‌, அறிவுரைகள்‌ நம்பிக்கையூட்டும்‌. எளிதில்‌ தன்னை உணரலாம்‌, பேரானந்தப்‌ ெபெருநிலையையும்‌ அவர்கள்‌ எளிதில்‌ பெறுவார்கள்‌. ஆயின்‌ ஒருவரது சொந்தக்‌ கருத்தையே நிலைப்படுத்தல்‌, மற்றவர்‌ கருத்தைமறுக்கச்‌ செய்யும்‌ முயற்சிகள்‌, ஒரு பொருளின்‌ நன்மை -தீமை இவற்றைப்‌ பற்றிய விவாதங்கள்‌ இருத்தல்‌ கூடாது” என்று பகர்ந்தருளினார்‌.

“விவாதம்‌” என்னும்‌ சொல்லானது ஹேமத்பந்த்‌ என்னும்‌ பட்டத்தை நான்‌ பெற்ற நிகழ்ச்சியை விவரிக்க கொடுத்து இருந்த வாக்குறுதியை ஞாபகமூட்டுகிறது. அதையே இப்போது கூறுகிறேன்‌. காகா சாஹேப்‌ தீக்ஷித்‌, நானாசாஹேப்‌ சாந்தோர்கர்‌ ஆகியவர்களுடன்‌ நான்‌ நெருங்கிய நட்போடிருந்தேன்‌. அவர்கள்‌ என்னை ஷீர்டிக்குப்‌ போய்‌ பாபாவின்‌ தரிசனத்தைப்‌ பெறும்படி வலியுறுத்தினார்கள்‌. ஆயின்‌ இடையில்‌ கிளம்பிய ஏதோ ஒன்று என்னை ஷீர்டிக்குப்‌ போகவிடாமல்‌ தடுத்தது. லோனாவாலாவில்‌ உள்ள எனது நண்பனின்‌ புதல்வன்‌ காய்ச்சல்‌ அடைந்தான்‌. எனது நண்பன்‌, வைத்தியமுறை மற்றும்‌ வேண்டுதல்‌ முறைகளில்‌ உள்ள எல்லா வழிகளிலும்‌ முயன்றார்‌. ஆயினும்‌ காய்ச்சல்‌ குறையவில்லை. முடிவாகத்‌ தனதுகுருவை தன்‌ மகனின்‌ படுக்கைக்குப்‌ பக்கத்தில்‌ அமரவைத்தார்‌. இதுவும் கூடப்‌ பலனளிக்கவில்லை. இதைக்‌ கேள்வியுற்றதும்‌, “என்‌ நண்பனின்‌ பையனைக்‌ காப்பாற்ற முடியாத குருவால்‌ யாது பயன்‌? குரு நமக்குஎதையுமே செய்ய இயலாதவரானால்‌ நான்‌ ஏன்‌ ஷீர்டிக்குப்‌போகவேண்டும்‌?” என்றவாறு எண்ணமிட்டு எனது ஷீர்டி விஜயத்தை ஒத்திப்போட்டேன்‌. ஆயின்‌ தடுக்க முடியாதது நிறைவேறியே தீரவேண்டும்‌. அஃதென்‌ விஷயத்தில்‌ பின்வருமாறு நடைபெற்றது.

பிராந்திய ஆபீசர்‌ நானா சாஹேப்‌ சாந்தோர்கர்‌ பஸ்ஸீனுக்கு சுற்றுலா போய்க்கொண்டிருந்தார்‌. தாணேவிலிருந்து தாதருக்கு வந்து பஸ்ஸீனுக்குச்‌ செல்லும்‌ வண்டிக்காகக்‌ காத்துக்கொண்டிருந்தார்‌. இடையில்‌ பாந்த்ராவுக்கு செல்லும்‌ ஒரு வண்டி வந்தது. அதில்‌ அவர்‌ ஏறியமர்ந்து பாந்த்ராவுக்கு வந்து என்னைக்‌கூப்பிட்டு அனுப்பினார்‌. நான்‌ ஷீர்டி விஜயத்தைக்‌ கைவிட்டது குறித்து என்னைக்‌ கடிந்தார்‌. எனது ஷீர்டி பயணத்தைப்‌ பற்றி நானாவின்‌ வாக்குவாதங்கள்‌ திருப்தியளிக்கக்கூடியதாகவும்‌, உற்சாகமூட்டுவதாகவும்‌ இருந்தன. எனவே நான்‌ அன்றிரவே ஷீர்டி புறப்படத்‌திட்டமிட்டேன்‌. என்னுடைய சாமான்களைக்‌ கட்டிமுடித்து ஷீர்டிக்குப்‌ புறப்பட்டேன்‌.

தாதருக்குப்‌ போய்‌ அங்கிருந்து மன்மாட்‌ போகும்‌ வண்டியைப்‌ பிடிக்கத்‌ திட்டமிட்டு, தாதருக்குப்‌ பயணச்‌சீட்டு பெற்று வண்டியில்‌ அமர்ந்திருந்தேன்‌. வண்டிபுறப்பட இருக்கும்போது ஒரு முஸ்லிம்‌ பெரியவர்‌ விரைவாக எனது பெட்டிக்கு வந்தார்‌. எனது மூட்டைமுடிச்சுகளைப்‌ பார்த்துவிட்டு “போகும்‌ இடம்‌ என்ன?” என்று கேட்டார்‌. நான்‌ எனது திட்டத்தைக்‌ கூறினேன்‌.பின்னர்‌ அவர்‌ என்னை தாதரில்‌ நிற்காமல்‌ போரிபந்தருக்கே நேராகப்‌ போகும்படியும்‌, ஏனெனில்‌ மன்மாட்‌ மெயில்‌ தாதரில்‌ நிற்காது என்றும்‌ அறிவுறுத்தினார்‌. இவ்வற்புதம்‌ நிகழ்ந்திராவிடின்‌ ஷீர்டிக்குத்‌ திட்டமிட்டபடி அடுத்தநாளே போய்ச்‌ சேராதிருந்திருப்பேன்‌. பல ஐயங்கள்‌ என்னைக்‌ கடுமையாகத்‌ தாக்கியிருக்கக்கூடும்‌. ஆயின்‌ அடுத்தநாள்‌ காலை 9-10 மணிக்குள்ளாகவே ஷீர்டியை அடைந்தேன்‌. அங்கே பாவ்‌ சாஹேப்‌ எனக்காகக்‌ காத்துக்கொண்டிருந்தார்‌. இது 1910ல்‌ நிகழ்ந்தது. அப்போது யாத்ரீக அடியார்களுக்கு ஒரே ஒருதங்குமிடம்தான்‌ இருந்தது. அது சாதேவினுடையவாதாவாகும்‌. குதிரை வண்டியிலிருந்து இறங்கிய பின்னர்‌ பாபாவின்‌ தரிசனம்பெற ஆவலாய்‌ ஏங்கியிருந்தேன்‌. மசூதியினின்று திரும்பி வந்த பெரும்‌ அடியவரான தாத்யாசாஹேப்‌ நூல்கர்‌, சாயிபாபா வாதாவின்‌ மூலையில்‌ இருக்கிறார்‌, முதலில்‌ ஒரு முன்னோடி தரிசனம்‌ செய்துவிட்டு, குளித்தபின்‌ சாவகாசமாகப்‌ பார்க்கலாம்‌ என்று கூறினார்‌. இதைக்‌ கேட்டவுடனே நான்‌ பாபாவிடம்‌ ஓடி சாஷ்டாங்க நமஸ்காரம்‌ செய்தேன்‌. எனது மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நரனா சாஹேப்‌ சாந்தோர்கர்‌ என்னிடம்‌ கூறியதற்கு அதிகமாகவே கண்டேன்‌. என்னுடையய புலன்களெல்லாம்‌ திருப்தியடைந்தன. நான்‌ பசி தாகத்தை மறந்தேன்‌. சாயிபாபாவின்‌ பாதங்களைத்‌ தொட்டவுடன்‌ ஆசீர்வதிக்கப்பட்ட ஒர்‌ புத்தம்புதிய வாழ்வையே அவர்‌ எனக்கு அருளியதை உணர்ந்தேன்‌. என்னை இச்செயலில்‌ இடைவிடாமல்‌ தூண்டி சாயிபாபாவின்‌ தரிசனத்திற்கு உதவி புரிந்தவர்களுக்கு கடமைப்பட்டதைக்‌ கருதினேன்‌. அவர்களை உண்மை உறவினர்களாக நினைக்கிறேன்‌. அவர்களுடைய கடனை நான்‌ திருப்பித்தர முடியாது. அவர்களை நினைத்து, அவர்கள்‌ முன்‌ வீழ்ந்துவணங்குகிறேன்‌.

சாயிபாபாவின்‌ தரிசனத்திலுள்ள நூதனமானது நான்‌ கண்டவாறு, நம்முடைய எண்ணங்கள்‌ மாறுகின்றன, முன்னைக்‌ கருமங்களின்‌ வலிமை அழிக்கப்படுகின்றது, அல்லது பற்றற்ற நிலை அதிகரிக்கின்றது. முன்னைப்‌ பிறவிகளில்‌ செய்த பல நற்கருமங்களால்‌ அத்தகைய சுயதரிசனம்‌ அடையப்படுகிறது. நீங்கள்‌ சாயிபாபாவை கண்டுவிட்டீர்களானால்‌ புறவுலகு எல்லாம்‌ சாயிபாபாவாகத்‌ தோற்றமளிக்கிறது.

சூடான விவாதம்‌

குருவின்‌ தேவையைப்‌ பற்றி எனக்கும்‌, பாலா சாஹேப்‌பாடேக்கும்‌ இடையில்‌ ஓர்‌ சூடான விவாதம்‌ நான்‌ ஷீர்டிக்கு வந்த தினத்தன்று நடைபெற்றது. “நம்‌சுதந்திரத்தை நாம்‌ ஏன்‌ இழக்க வேண்டும்‌, மற்றவர்களிடம்‌ ஏன்‌ சரணாகதி அடைய வேண்டும்‌” என்று நான்‌விவாதித்தேன்‌. “நாம்‌ நம்முடைய கடமையைச்‌ செய்ய வேண்டியிருக்கையில்‌ ஏன்‌ குரு தேவைப்படுகிறார்‌? ஒருவன்‌ தன்னாலான முயற்சிகளைச்‌ செய்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்‌. சோம்பேறியாகத்‌ தூங்குவதைத்‌ தவிர வேறெதையும்‌ செய்யாத ஒருவனுக்கு குரு என்ன செய்துவிட முடியும்‌?” இங்ஙனம்‌ நான்‌ சுதந்திர எண்ணத்திற்கு வாதாடினேன்‌. பாடே கர்மத்துக்காக (தலைவிதி) வாதாடிக்‌ கூறியதாவது, “நடப்பது நடந்தே தீரும்‌. பெரியோர்கள்‌ எல்லாம்‌ தோல்வியுற்றிருக்கிறார்கள்‌. மனிதன்‌ ஒருவழியில்‌ நினைக்க, தெய்வம்‌ வேறு வழியில்‌ செயல்படுகிறது. உம்முடைய புத்தி சாதுர்யத்தைத்‌ தள்ளிவிடுக. பெருமையும்‌, அஹங்காரமும்‌ உமக்கு உதவாது”. கொள்கைகள்‌, மாறுபாடுகள்‌ இவற்றுடன்‌ இவ்விவாதம்‌ ஒருமணி நேரத்திற்குமேல்‌ நடைபெற்றும்‌ வழக்கம்போல்‌ ஒருமுடிவும்‌ காணப்படாது முடிவாக களைப்படைந்துவிட்டோம்‌. நானும்‌ மன அமைதியை இழந்தேன்‌. வலிவான சரீர அபிமானம்‌, அஹங்காரம்‌ இவை இல்லாவிடில்‌ விவாதமே இல்லையெனக்‌ கண்டேன்‌. அஹங்காரமே விவாதத்தை வளர்க்கிறது என்று கூறலாம்‌.

பிறகு நாங்கள்‌ மசூதிக்கு மற்றவர்களுடன்‌ சென்றபோது காகா சாஹேப்‌ தீக்ஷித்தை, பாபா பின்வருமாறு வினவினார்‌. சாதே வாதாவில்‌ என்ன நடந்துகொண்டிருந்தது? விவாதம்‌ எதைப்‌ பற்றியது? என்று கூறி என்னை உற்று நோக்கி மேலும்‌ வினவியதாவது, “ஹேமத்பந்த்‌ என்ன கூறுகிறார்‌?” இவ்வார்த்தைகளைக்‌ கேட்டு நான்‌ மிகவும்‌ ஆச்சரியமடைந்தேன்‌. நான்‌ தங்கியிருந்ததும்‌ விவாதம்‌ நடந்ததுமான சாதே வாதாவானது மசூதியினின்று நல்ல தூரத்திலிருக்கிறது. சர்வ வியாபியாகவும்‌, அகத்திலிருந்து ஆட்டிவைப்பவராகவும்‌ இல்லாவிடில்‌ எங்களது விவாதத்தை பாபா எங்ஙனம்‌ அறிந்திருக்க முடியும்‌?

முக்கியமானதும்‌ ‘ஞானம்‌’ மிளிர்வாதுமான பட்டம்‌

சாயிபாபா என்னை ஏன்‌ ஹேமத்பந்த்‌ என்னும்‌ பெயரால்‌ அழைக்கவேண்டும்‌ என்று நான்‌ எண்ணமிட ஆரம்பித்தேன்‌. இச்சொல்‌ ‘ஹேமத்ரியபந்த்‌’ என்ற வார்த்தையிலிருந்து திருத்தப்பட்டதாகும்‌. இந்த ஹேமத்ரியபந்த்‌ யாதவ அரசவம்சத்தைச்‌ சேர்ந்த ராமதேவ்‌,மஹாதேவ்‌ என்ற தேவகிரி அரசர்களின்‌ புகழ்பெற்ற மந்திரியாவார்‌.

கல்வி, கேள்வி நிரம்பப்பெற்று, நற்பண்புகள்‌ நிறையப்பெற்ற அவர்‌, ஆன்மிக விஷயங்கள்‌ அடங்கிய ‘சதுர்வர்க சிந்தாமணி’ மற்றும்‌ ‘ராஜ ப்ரஷஸ்தி’ போன்றபல உயர்ந்த நூல்களின்‌ ஆசிரியருமாவார்‌. கணக்குப்‌ பேரேடுகளில்‌ புதியமுறைகளைக்‌ கண்டுபிடித்துப்‌ புகுத்தியவரும்‌ மற்றும்‌ மராத்தியச்‌ சுருக்கெழுத்தின்‌ கர்த்தாவுமாவார்‌. ஆனால்‌ நான்‌ முற்றிலும்‌ மாறுபட்டவன்‌. அறிவற்ற, ஓட்டமற்ற நடுத்தர எண்ணத்தோன்‌. எனவே அந்தப்‌ பட்டம்‌ எனக்கு எதற்காகச்‌ சூட்டப்பட்டது என்பது விளங்கவில்லை. ஆனாலும்‌ அதைக்‌ குறித்துத்‌ தீவிரமாகச்‌ சிந்தித்து அது என்‌ அஹங்காரத்தை அழித்து, பணிவாகவும்‌, அடக்கமுடனும்‌ இருக்கவேண்டும்‌ என்பதற்காகவே அளிக்கப்பட்டது என நினைத்தேன்‌. விவாதத்தில்‌ எனக்குள்ள புத்தி சாதுர்யத்துக்காகவும்‌ அது எனக்கு வழங்கப்பட்டதாகும்‌.

எதிர்கால நிகழ்ச்சிகளை உற்றுநோக்கில்‌, பாபாவினது சொற்கள்‌ (தாபோல்கரை ஹேமத்பந்த்‌ என அழைத்தது) முக்கியமானதும்‌ தீர்க்க தரிசனம்‌ நிறைந்ததும்‌ ஆகும்‌. ஏனெனில்‌ மிகவும்‌ புத்திசாலித்தனமாக சாயிசமஸ்தானத்தின்‌ நிர்வாகங்களைக்‌ கவனித்தது, எல்லாக்‌கணக்குகளையும்‌ நன்றாக வைத்திருந்தது, முக்கியமானதும்‌ ஆத்மார்த்த விஷயங்களான ஞானம்‌, பக்தி, அவாவின்மை, ‘நான்‌’ தன்மையை சரணமிடுதல்‌, தன்னையுணர்தல்‌ போன்றவற்றைக்‌ குறிக்கும்‌ சாயி சத்சரிதம்‌ என்ற அத்தகைய சிறப்பான நூலின்‌ ஆசிரியராகவும்‌ இருந்ததைக்‌ காண்கிறோம்‌.

குருவின்‌ தேவையைப்பற்றி

ஹேமத்பந்த்‌, பாபா இவ்விஷயத்தைப் பற்றி என்ன சொன்னார்‌ என்று எவ்விதக்‌ குறிப்பும்‌ விட்டுவைக்கவில்லை. ஆனால்‌ காகா சாஹேப்‌ தீக்ஷித்‌ இவ்விஷயத்தை தனது குறிப்புக்களில்‌ பதிப்பித்துள்ளார்‌. ஹேமத்பந்தின்‌ சாயிபாபா சந்திப்பின்‌ அடுத்த நாளில்‌, பாபாவிடம்‌ காகா சாஹேப்‌ தீக்ஷித்‌ சென்று தான்‌ ஷீர்டியை விட்டுப்போக வேண்டுமா எனக்கேட்டார்‌. பாபா “ஆம்‌” என்றார்‌. பிறகு “எங்கே போவது” என யாரோ கேட்டார்‌.பாபா “உயர.. மேலே..!” என்று கூறினார்‌. அம்மனிதர்‌ “வழி எப்படிப்பட்டது?” என பாபாவிடம்‌ வினவினார்‌. பாபா கூறினார்‌, “அங்கே போவதற்குப்‌ பல வழிகள்‌ உள்ளன. இங்கிருந்தும்‌ (ஷீர்டியிலிருந்தும்‌) ஒரு வழி உள்ளது. பாதை கடினமானது. புலிகளும்‌, ஓநாய்களும்‌ வழியிலுள்ள காடுகளில்‌ உள்ளன”. நான்‌ (காகா சாஹேப்‌ தீக்ஷித்‌)கேட்டேன்‌, “ஒரு வழிகாட்டியை நாம்‌ அழைத்துச்‌சென்றால்‌ என்ன?” அதற்கு பாபா கூறினார்‌, “அப்போது கடினம்‌ இல்லை. புலி, ஓநாய்‌, படுகுழிகள் ‌முதலியவற்றிலிருந்து உன்னை விலக்கி, உன்‌ குறிக்கோளை அடைய நேரடியாக அழைத்துச்‌ செல்வார்‌. வழிகாட்டி இல்லையென்றால்‌ காடுகளில்‌ நீ காணாமல்‌ போகலாம்‌ அல்லது படுகுழியில்‌ விழும்‌ அபாயம் ‌இருக்கிறது.”

இந்நிகழ்ச்சியின்போது தாபோல்கரும்‌ அறை அருகே இருந்தார்‌. இதுவே குரு அவசியமா என்னும்‌ விவாதத்திற்கு பாபாவின்‌ பதில்‌ என்று எண்ணினார்‌. ஒரு மனிதன்‌ சுதந்திரமானவனா அல்லது கட்டுப்பட்டவனா என்னும்‌விவாதம்‌ ஆன்ம விஷயங்களில்‌ உபயோகமில்லைஎன்றும்‌, இவ்வத்தியாயத்தின்‌ மராத்தி மூலப்பதிப்பில்‌ விளக்கப்பட்டபடி பெரிய அவதாரங்களான ராமர்‌, கிருஷ்ணர்‌ முதலியோர்‌ தமது குருக்களான வசிஷ்டர்‌, சாந்தீபனி ஆகிய முனிவர்களிடம்‌ தன்னையறிவதற்காக சரணடைந்தார்கள்‌ என்றும்‌, குருவினுடைய உபதேசத்தினாலேயே பரமார்த்திகம்‌ அடையப்படுகிறது என்றும்‌, நம்பிக்கையும்‌ - பொறுமையுமே அத்தகைய முன்னேற்றத்திற்குத்‌ தேவையான நற்பண்புகளாம்‌ என்பதுமே பாபாவின்‌ திருக்குறிப்பாம்‌.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌

Shirdi Shri Sai Satcharitra Tamil book

PHP Social Sharing Buttons